கலாசாரம் இல்லாத ஒரு இனம் இருக்க முடியாது – நிதானித்து சேவையாற்ற வேண்டும் – சுமந்திரன்

0
594
tamilnews can not race culture Therefore Cultural Center setup

(tamilnews can not race culture Therefore Cultural Center setup)

கலாசாரம் இல்லாத ஒரு இனம் இருக்க முடியாது. ஆகவே, கலாசார மத்திய நிலையம் அமைக்கப்படுகின்ற போது, அது யாருக்கு, எப்படியான மக்களுக்கு, எந்தப் பிரதேசத்துக்கு உரியது என்பதனை நாங்கள் நிதானித்து அறிந்து அந்த இடங்களிலே ஆற்றப்படுகின்ற சேவைகள், பயிற்றப்படுகின்ற கலைகள் அப்படியான கலாசார விழுமியங்களோடு ஒத்துப்போவதாக இருப்பதனை உறுதிசெய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – வரணி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கலாசார மத்திய நிலையங்கள் அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து வடமராட்சியில் இடம்பெற்ற நிகழ்விலே பல கருத்துக்களைப் பரிமாறியிருந்தோம்.

ஒரு குறித்த மொழியைப் பேசும் இனத்துக்கு அடையாளமாக கலாசார பின்னணி மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

பிரதேசத்துக்குப் பிரதேசம் வித்தியாசமான கலைகள் இந்தப் பிரதேசங்களிலே உள்ளன. அழிந்து போகின்ற கலைகள் இருக்கின்றன.

அவற்றுக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும். இவை மீளவும் மக்கள் மத்தியிலே பரவலாக உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

இன்றைய நவீன உலகத்தில் அனைத்துமே ஒரு கையடக்கத் தொலைபேசியில் பலர் பகிர்ந்துகொள்ளுகின்ற எண்ணக் கருத்துக்களின் ஊடாக மக்களுக்கு செய்திகளும் தகவல்களும் சென்றடைந்த வண்ணம் இருக்கின்றன.

ஆனால் ஒரு கருத்தை ஆழமாக மக்களுடைய மனதிலே பதிய வைப்பதற்கு, நேரடியாக அந்தக் கருத்தைச் சொல்லாமல், இப்படியாக மேடையில் நின்று பேசுகின்ற பேச்சைப் போல அல்லாமல் அல்லது குறுஞ்செய்தியிலே சொல்வதைப் போலல்லாமல், ஒரு கலாசார வடிவத்திலே ஒரு கலையின் உருவத்திலே, அதனைப் பகிர்கின்ற போது அது ஆழமான தாக்கத்தையும் நீண்ட ஒரு விளைவையும் மக்கள் மனதிலே ஏற்படுத்த வல்லதாக இருக்கின்றது.

ஆகையினாலே, நாங்கள் எங்களுடைய கலாசார விழுமியங்களைப் பற்றி சிந்திக்கின்றபோது இப்படியான மண்டபங்களை அமைத்து, மத்திய நிலையங்களை அமைத்து இந்தக் கலாசார வடிவங்களை, கலை வடிவங்களை நாங்கள் மெருகூட்டுகின்ற போது என்னவிதமாக எங்களுடைய சிந்தனைகளை நாங்கள் பகிருகின்றோம்,

அதை கலை வடிவங்களின் மூலமாக நாங்கள் பகிருகின்றோமா என்பது குறித்து சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

வீதி நாடகங்கள் மூலமாக நாட்டுக்கூத்து இந்தப் பிரதேசங்களில பல இடங்களில் மிகவும் பிரபல்யமாக இருந்தது. இரவிலே இவை இம்பெறும்.

நாட்டுக்கூத்து மூலமாக நேரடியாக ஒரு விடயத்தைச் சொல்லாமல் ஆனால் பலவிதமான உண்மைகளையும் விசேடமாக இளைஞர்கள் மத்தியிலே வளர்க்கப்பட வேண்டிய விழுமியங்களையும் கலை வடிவிலே நாங்கள் புகட்டுவது மிகவும் அத்தியாவசியமானதும் மிகவும் பயன்தரக் கூடியதாகவும் இருக்கின்றது.

அந்தவகையிலே நான் பார்க்கின்ற பல கலை வடிவங்களிலே பொதுவாக தமிழர் பண்பாட்டுடன் சேர்ந்ததாகவும், தென்னிந்திய கலை கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்ததுமான நடனம், இசை போன்ற கலைகள் கூடுதலாக பயிற்றப்படுவதும் பிரயோகப்படுத்தப்படுவதுமாக இருக்கின்றது.

ஆனால், ஆரம்பத்திலேயே சொன்னதைப் போல, குறிப்பிட்ட பிதேசங்களிலே இருக்கின்ற தனித்துவம் மிக்க கலை வடிவங்களை நாங்கள் கண்டறிந்து, அவற்றை மெருகூட்டி, அவற்றுக்கு அந்தந்தப் பிரதேசங்களிலே இந்த மத்திய நிலையத்திலே பயிற்றப்படுவதற்கும் வடமராட்சியிலே இருப்பது பயிற்றப்படுவதற்கும் அல்லது இன்று தென்மராட்சியிலே கூட இரண்டு கலாசார மத்திய நிலையங்கள் காணப்படுகின்றன.

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவை இரண்டாக பிரிப்பதற்கான முன்னோடியாக கூட இது இருக்கலாம். அதற்கான நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஆகவே, அந்தந்த குறித்த பிரதேசத்துக்குரிய விசேடத்துவத்தை முன்னிலைப்படுத்துவதற்குரிய விடயங்களை நாங்கள் பகுத்தறிந்து அதனைப் பயிற்றுவிப்பது சாலச்சிறந்தது என்று நான் நினைக்கின்றேன்.

இந்தப் பிரதேசத்திற்கு வருகை தந்திருக்கின்ற என்னுடைய நீண்டநாள் நண்பரும் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய கௌரவ விஜயதாஸ ராஜபக்ஸ அவர்களை இந்தப் பிரதேசத்துக்கும் வரவேற்பதில் நான் பெருமையடைகின்றேன்.

உயர்கல்விக்குத் தகுந்த அமைச்சர் அவர். காலையிலே நான்சொன்னதைப் போலவே அவர் தனது வாழ்நாளில் படிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை.

தொழில் செய்ய ஆரம்பித்து பல வருடங்களுக்குப் பிறகும் ஒவ்வொன்றாக இரண்டு கலாநிதி பட்டங்களைப் பெற்றவர். பல புத்தகங்களை எழுதியிருக்கின்றார்.

சட்டத்திலே மட்டுமல்ல பௌத்த சமயம் குறித்து ஒரு புத்தகத்தை எழுதி அதிலும் கலாநிதி பட்டத்தைப் பெற்றிருக்கின்றார். சட்டத்துறையிலும் ஒரு கலாநிதி பட்டத்தைப் பெற்றிருக்கின்றார்.

அப்படியாக பலதரப்பட்ட விடயங்களிலே ஆர்வத்தைக் காண்பித்து அதிலே கற்பதற்கு வயதெல்லை இல்லை என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கின்ற உயர்கல்வி அமைச்சர் கலை கலாசார விடயங்களிலும் மிகவும் ஆர்வமாக ஈடுபடும் ஒருவர்.

ஆகையினாலே இந்தப் புதிய துறைக்கு அவர் நியமிக்கப்பட்டிருப்பது இந்த நாட்டிலே இன்று மிகவும் பிரச்சனைக்குரிய ஒரு விடயமாக இருக்கும் உயர்கல்வி விடயத்தை தீர்த்து அவர் சரியான பாதையில் அதனை நெறிப்படுத்துவார் என்று நாங்கள் நம்புகின்றோம்.

அதேபோன்று கலை கலாசாரங்களை வளர்க்கின்ற போது வெவ்வேறு பிரதேசங்களிலே உள்ள கலை கலாசாரங்களை வளர்த்து இவை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நாங்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டாடக்கூடியதான ஒரு காலகட்டத்தை இந்த சாட்டிலே நாங்கள் ஏற்படுத்தவதற்கு நாங்கள் விளைந்துகொண்டிருக்கின்றோம்.

வெவ்வேறு மக்கள் வாழுகின்ற இந்த நாட்டிலே வெவ்வேறு மொழிகள் பேசுகின்றவர்கள் வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றுகின்றவர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக வெவ்வேறு கலை கலாசார பின்னணியிலே வாழுகின்ற மக்கள் அந்த தனித்துவங்களைப் பேணியவர்களாக அந்த தனித்துவங்களுக்கு முதலிடம் கொடுப்பவர்களாக இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் அன்னியோன்யமாக வாழக்கூடியதாக இருந்தது.

ஒருவரை ஒருவர் மதித்து சமத்துவமாக இந்த நாட்டிலே சரிசமமாக வாழக்கூடியதாகவும் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்பட்டதான ஒரு முறையிலே நாங்கள் வாழக்கூடியதாகவும் செய்யக்கூடிய வகையிலே பல நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் எடுத்து இப்பொழுது நீண்ட காலத்திற்குப்பிறகு வருகிற வாரம் மீளவும் தொடங்க இருக்கிறது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் அந்த வழிநடத்தல் குழுவிலே ஒரு முக்கிய உறுப்பினராக கௌரவ அமைச்சர் இருக்கின்றார். காணி அதிகாரங்களைக் குறித்து அது எப்படியாக அதிகாரப் பகிர்விலே இடம்பெற வேண்டும் என்பதைக் குறித்து எங்களுடைய இடைக்கால அறிக்கையிலே வரபைத் தயார் செய்தவர் அவர்.

ஆகையினாலே தொடர்ச்சியாக நாங்கள் இந்த விடயத்திலே ஈடுபடுகின்றபோது மிகவும் சீக்கிரமாக முடிக்க வேண்டிய இந்த விடயத்திலே ஈடுபடுகின்ற போது அவருடைய முக்கியமான ஈடுபாடு இந்த விடயத்திலே இருக்க வேண்டும் என்று இந்த வேளையிலே உங்கள் சார்பாகவும் வடபகுதி மக்கள் சார்பாகவும் அவரிடத்திலே கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

(tamilnews can not race culture Therefore Cultural Center setup)

More Tamil News

Tamil News Group websites :